புத்தர் சிலையை 60 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற மூவர் சிக்கினர்!

kaithu
kaithu

அநுராதபுரம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட நுவரவாவிக்கு அருகில், புதையல் தோண்டியதனூடாக பெற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் புத்தர் சிலையொன்றை 60 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற மூவரை விசேட காவற்துறை அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

மிஹிந்தலை, கஹட்டகஸ்திகலிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 40, 43, 45 வயதுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவற்துறை தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.

காவற்துறை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சுமார் 22 கிலோகிராம் புத்தர் சிலை கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் அநுராதபுரம் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விசாரணைகளின் பின்னர் அநுராதபுரம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.