காணியினை வழங்காது இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு

ad 20200322162936 4
ad 20200322162936 4

வவுனியா பரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள காணியினை விவசாயம் செய்வதற்காக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் பிரித்து வழங்குவதாக 2014 ஆம் ஆண்டு உறுதிமொழி வழங்கப்பட்ட நிலையில் பலவருடங்கள் கடந்தும் அது நிறைவேற்றப்படவில்லை என்று பரசங்குளம் கிராம அபிவிருத்திசங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக கிராம அபிருத்தி சங்கத்தினர் தெரிவித்த போது,
வவுனியா பரசங்குளம் பகுதியில் வசித்துவரும் எமக்கு இந்தப்பகுதியில் அமைந்துள்ள குளத்தின் கீழ் விவசாயம் செய்வதற்காக ஒரு ஏக்கர் காணி வீதம் வழங்குவதாக வவுனியா வடக்கில் அந்தக்காலப்பகுதியில் பதவியில் இருந்த பிரதேச செயலாளர் உறுதி அளித்திருந்தார். அதற்கமைவாக அந்தப்பகுதியில் அமைந்துள்ள குளம் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் மக்களின் பூரண ஒத்துழைப்போடு புனரமைக்கப்பட்டிருந்தது.

ஆயினும் குளம் புனரமைக்கப்பட்டு 6 வருடங்கள் கடக்கின்ற நிலையில் எமக்கு வழங்குவதாக சொல்லப்பட்ட விவசாயக்காணி இதுவரை வழங்கப்படவில்லை.

குறித்த விடயம் தொடர்பாக காணி ஆணையாளர், பிரதேச செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்து தரப்பிற்கும் நாம் எமது கோரிக்கையை தெரிவித்துவருகின்ற நிலையில் எமது பிரச்சனையை எவரும் தீர்ப்பதற்கு முன்வரவில்லை என்று அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

குறித்த காணி 1975 ஆண்டிற்கு முன்னர் சிலருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆயினும் அது கைவிடப்பட்ட நிலையில் வனவளத்திணைக்களத்தால் விக்ஸ்மரங்கள் நாட்டப்பட்டு காடு மீள் உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது. 
இந்த நிலையில் தற்போது எமக்கு வழங்குவதாக சொல்லப்பட்ட காணியில் வேறு நபர்கள் விவசாயம் செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

நாம் அன்றாடம் கூலித்தொழிலை நம்பியே வாழ்க்கை நடாத்திவருவதுடன், தற்போது கால் ஏக்கர் காணிகளிலேயே வசித்து வருகின்றோம். எனவே விவசாய காணி எமக்கு வழங்கப்படும் பட்சத்தில் எமது வாழ்வாதாரத்தினை கொண்டு செல்ல முடியும்.   எனவே அதிகாரிகள் எமது பிரச்சனையை விரைவாக தீர்ப்பதற்கு முன்வரவேண்டும் இல்லையேல் குறித்த காணி எமக்கு வழங்கப்படாது என்று எழுத்து மூலமாக தெரிவிக்கவும் என்று கிராம அபிவிருத்திச்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.