அரசு தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றது- ஐக்கிய மக்கள் சக்தி

Lakshman Kiriella 900x450 1
Lakshman Kiriella 900x450 1

புதிய அரசமைப்பை இயற்றும் விடயத்திலும் அரசு தன்னிச்சையாகச் செயற்பட்டு வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிரணியின் பிரதம கொறடாவுமான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“புதிய அரசமைப்பு இயற்றப்படும், தேர்தல் முறைமை மாற்றப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். நாட்டில் தற்போதுள்ள மிக முக்கிய பிரச்சினைகளா இவை?

இந்த அரசிடம் குழு வேலைத்திட்டம் இல்லை. தன்னிச்சையான முடிவுகளே எடுக்கப்படுகின்றன. அரசமைப்பின் 19ஆவது திருத்தம் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டது. எனினும், அரசமைப்பின் 20ஆவது திருத்தம் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டன. நாட்டில் தற்போது ஏற்பட்டுளள் குழப்பங்களுக்கும் இந்த 20 திருத்தம்தான் காரணம்.

ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் தோல்வி. ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் சுற்றில் தோல்வி. எதிர்காலத்தில் என்ன நடக்கும் எனத் தெரியவில்லை. மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டினால் மட்டுமே சர்வதேசத்தை வெல்ல முடியும் என்றார்.