நிபந்தனைகளை நிறைவேற்றும் உறுதிமொழிக்கு அமைய சேதன உரத்தைப் பயன்படுத்த இணக்கம்

1628099310 fertilizer L
1628099310 fertilizer L

நான்கு நிபந்தனைகளை நிறைவேற்றும் உறுதிமொழிக்கு அமைய, பெரும்போகத்தில் நெற்செய்கைக்கு, சேதன உரத்தைப் பயன்படுத்துவதற்காக, அரசாங்கத்துக்கும், இலங்கை தேசிய விவசாய அமைப்பிற்கும் இடையே இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பெரும்போகத்தில் சிறப்பான விளைச்சலைப் பெற்றுக்கொள்வதற்காக, நான்கு நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என, விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், விவசாய அமைச்சிற்கு கோரிக்கை கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளனர்.

சேதன உரத்தை, கமநல திணைக்களம் ஊடாக உரிய காலத்தில் வழங்குதல், அந்த உரத்துக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றல், உரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த விளைச்சலோ அல்லது வேறு பாதிப்புக்களோ ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு வழங்க இணங்குதல் முதலான நிபந்தனைகள் அதில் உள்ளடங்கியுள்ளன.

அத்துடன், தற்போது சந்தையில் உள்ள கிருமிநாசினி மற்றும் களைநாசினி என்பன அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்தி, உத்தரவாத விலைக்கு அவற்றை கொள்வனவு செய்ய விவசாயிகளுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்பதும் அந்த நிபந்தனைகளில் உள்ளடங்கியுள்ளது.

குறித்த கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில், விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்புகொண்டு தெளிபடுத்தியுள்ளார்.

இதற்கு ஜனாதிபதியின் இணக்கப்பாடு கிடைத்ததென விவசாய அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெரும்போகத்திற்கு அவசியமான உரத்தை வழங்குமாறுகோரி பல்வேறு பிரதேசங்களிலும் விவசாயிகள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரும்போகத்திற்கு அவசியமான சேதன உரத்தை விநியோகிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின்கீழ், அரச நிறுவனங்களினால் இறக்குமதி செய்யப்பட்ட பொற்றாசியம் க்ளோரைட் உரத்தை தாங்கிய வெகொராஸ் என்ற கப்பல், கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது.

லித்துவேனியாவில் இருந்து வந்த குறித்த கப்பலில், 30 ஆயிரம் மெற்றிக் டன் உரம் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த உரம், மட்டக்களப்பு, அம்பாறை, அநுராதபுரம், குருநாகல், புத்தளம், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை முதலான மாவட்டங்களிலுள்ள கமநல திணைக்களத்திற்கு நேற்றிரவு முதல் விநியோகிக்கப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.