இழுவைப் படகுகளுக்கு எதிரான பேரணிக்கு ஆதரவு வழங்குங்கள்! – சுமந்திரன்

MA Sumanthiran 720x450 1
MA Sumanthiran 720x450 1

“இழுவைப் படகு தடைச் சட்டத்தை முறையாக அமுல்படுத்துமாறு கடற்தொழில் நீரியல்துறை அமைச்சரைக் கோரி எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை கடல் வழியாக நடைபெறவுள்ள எதிர்ப்புப் பேரணிக்கு அனைத்து மக்களும் ஆதரவு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

“எமது கடல் வளத்தையும் நீரியல் வளத்தையும் மிக மோசமாக அழிக்கும் இழுவைப்படகுகள், 2017ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனாலும், கடற்றொழில், நீரியல் அதிகாரிகள் இந்தத் தடையை அமுல்படுத்தாத காரணத்தால் உள்ளூர், வெளிப்பிரதேச மற்றும் வெளிநாட்டு இழுவைப்படகுகள் தொடர்ச்சியாக எமது கடல் வளத்தை முற்றாக சூறையாடுகின்றன.

இந்தநிலை தொடருமாக இருந்தால் அடுத்த தலைமுறைக்கே கடல் வளம் இல்லாது போய்விடும்.

இந்தச் சட்டத்தை முறையாக அமுல்படுத்தக் கோரி எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை கடல் வழியான எதிர்ப்புப் பேரணி இடம்பெறும்.

இழுவைப் படகு தடைச் சட்டத்தை முறையாக அமுல்படுத்துமாறு கடற்தொழில் நீரியல்துறை அமைச்சரைக் கோருவதே இந்தப் பேரணியின் நோக்கமாகும். அனைத்து மக்களும் இந்த எதிர்ப்புப் பேரணிக்கு ஆதரவு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.