சேதன பசளையில் விளைச்சல் கிடைக்காவிட்டால் நட்டஈடு – மஹிந்தானந்த

mahindananda aluthgamage 1
mahindananda aluthgamage 1

பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரத்தை தற்போது இறக்குமதி செய்ய முடியாது. அதற்கான காலமுமில்லை. இறக்குமதி செய்வதாயின் இரண்டு மாத காலம் காத்திருக்க வேண்டும். ஆகவே விவசாயிகள் ஒரு சிலரது அரசியல் நோக்கத்திற்கு உள்ளாகாமல் விவசாய நடவடிக்கையில் ஈடுப்பட வேண்டும். சேதன பசளை பாவனையில் எதிர்பார்க்கும் விளைச்சல் கிடைக்காவிட்டால் அதற்கு அரசாங்கம் நட்டஈடு வழங்கும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பெரும்போக விவசாய நடவடிக்கை ஆரம்பமானது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் குறிப்பிட்டதாவது,

பெரும்போக விவசாயத்திற்கு தேவையான உரத்தை கோரி விவசாயிகள் வீதிக்கிறங்கி போராடினார்கள். தற்போது சேதன பசளை உரம் தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டும், இறக்குமதி செய்யப்பட்டும் நாடு தழுவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக விவசாய நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பமானது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள 29 கமநல சேவையாளர் பிரிவுகளுக்கு மூன்று வகையான சேதன பசளை உரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இம்மாதத்தின் நடுப்பகுதியில் நைட்ரஜன் உள்ளடங்கிய உரம் இறக்குமதி செய்யப்படும். அத்துடன் நெல் மற்றும் சோள பயிர்ச்செய்கைக்கு தேவையான உரம் 567 கமநல சேவையாளர் பிரிவுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

உரம் கோரிய விவசாயிகள் தற்போது சேதன பசளை வேண்டாம். இரசாயன உரம் வேண்டும் என போராடுகிறார்கள். இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு காலம் போதாது. இறக்குமதி செய்வதாக இருந்தால் 2மாத காலம் காத்திருக்க வேண்டும்.

போலியான இரசாயன உரத்தை கோரி விவசாயிகளை போராட்டத்தில் இறக்கி அதனூடாக அரசியல் இலாபம் தேடிக் கொள்ள ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். உரிய நேரத்திற்கு உரம் வழங்குவோம் என்று விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை பாதுகாத்துள்ளோம். தற்போது வழங்கப்பட்டுள்ள உரத்தினால் விளைச்சல் குறைவடைந்தால் அரசாங்கம் அதற்கு நட்டஈடு வழங்கும் என குறிப்பிட்டார்.