எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் அரசாங்கத்தை வீழ்த்தலாம் – குமார வெல்கம

kumara welgama 1
kumara welgama 1

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரச நிர்வாகத்திற்கு பொருத்தமற்றவர் என்பதை நான் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னரே குறிப்பிட்டேன். நான் குறிப்பிட்டதை மக்கள் இன்று ஏற்றுக் கொண்டுள்ளதுடன், என்னையும் தூரநோக்குள்ள அரசியல்வாதி என்றும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். மாகாண சபை தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து போட்டியிட்டால் அரசாங்கத்தை அடியோடு வீழ்த்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அமெரிக்கா,சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. இவற்றை தடுக்க தற்துணிவு உள்ள தலைவர் நாட்டில் கிடையாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு அரசியல் மற்றும் அரச நிர்வாகம் இல்லை என குறிப்பிட்டுள்ளதை சமூக ஊடகங்களின் ஊடாக அறிய முடிகிறது.

இராணுவ பயிற்சி பெற்றுள்ளவர்க்கும், பிரதேச சபை பதவி வகிக்காதவருக்கும் அரச நிர்வாகத்தை கையளிக்க வேண்டாம். ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ அரச நிர்வாகத்திற்கு தகுதியற்றவர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தெளிவாக குறிப்பிட்டு வெளியேறினேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பலவீனமான அரச தலைவர் என்பதை நான் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னரே குறிப்பிட்டேன். நான் குறிப்பிட்டதை நாட்டு மக்கள் இன்று ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அத்துடன் என்னையும் தூரநோக்கமுள்ள அரசியல்வாதி என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

மாகாண சபை தேர்தல் குறித்து தற்போது அவதானம் செலுத்துகிறார்கள். மாகாண சபை தேர்தல் இலங்கைக்கு தேவையற்றது. அது ஒரு வெள்ளை யானை போன்றது. கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டவர்களை திருப்திப்படுத்தும் ஒரு முறைமையாக மாகாண சபை தேர்தல் கருதப்படுகிறது. தற்போது மாகாண சபை முறைமை இல்லாத காரணத்தினால் மாகாண சபை நிர்வாகம் செயற்படாமலா போய்விட்டது.

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் அரசாங்கத்தை வீழ்த்த முடியும். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்பட்டேன். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களுக்கு  வெள்ளை துணி (சில் துணி,) சேலை, கைக்கடிகாரம், பணம், வழங்கினோம். வெலிமட பகுதியில் உள்ள தமிழர்களுக்கும் வெள்ளை துணி (சில் துணி) கொடுத்தோம். இருப்பினும் தேர்தலில் படுதோல்விடைந்தோம். ஆகவே தற்போது அச்சம் கொள்ள தேவையில்லை. எதிர்தரப்பினர் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாகாண சபை தேர்தலின் ஊடாக அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியும்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை நாட்டுக்கு சாபகேடு, இதனை முழுமையாக இரத்து செய்ய வேண்டும்.நிறைவேற்று அதிகாரம் யுத்தத்தை மாத்திரம் நிறைவு செய்தது.

2009ஆம் ஆண்டுக்கு பின்னரான ஆட்சி தலைவர்கள்  தோல்வியடைந்துள்ளார்கள். பிணைமுறி மோசடியில் இரு அரசாங்கங்களும் தொடர்புபட்டுள்ளதால் குற்றவாளிகள் ஒருபோதும் தண்டிக்கப்படமாட்டார்கள் என்றார்.