180 நாட்களில் 4,743 சிறுவர்கள் துஷ்பிரயோகம்

child 2
child 2

நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 வீதமானோர் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேருவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், “இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலும், 180 நாட்களில் (6 மாதங்களினுள்) சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,743 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கையை 180 ஆல் வகுக்கும்போது, ​​ நாள் ஒன்றிற்கு 25 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்.

அதாவது, ஒரு மணித்தியாலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளில் பாதிக்கின்ற சிறுவர்களை வயதுக்கு ஏற்ப பிரித்தால், 21வீதமானோர் 5 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள், 17வீதமானோர் 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் , 38 வீதமானோர் 11 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் . 75 வீதமானோர் 15 வயதிற்குட்பட்டவர்களாகவும் பதிவாகியுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 13 வீதமானோரின் பிரதிவாதியாக தந்தை அடுத்ததாக தாய் மற்றும் மதகுருமார்கள் இருக்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாளாந்தம் சுமார் 6 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகின்றார்கள் என்று சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்தார்.