ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினரும் தொழிற்சங்கப் போராட்டத்துக்குத் தயார்

சுமேத சோமரத்ன
சுமேத சோமரத்ன

ரயில் பருவகால அட்டை (சீசன்) உள்ளவர்கள் மாத்திரம் ரயில் சேவையைப் பயன்படுத்த முடியும் என்ற அரசின் தீர்மானம் பருவகால அட்டை இல்லாதவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ள ரயில் நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, இப்பிரச்சினைக்கு ரயில் திணைக்களம் உரிய தீர்வை முன்வைக்காவிட்டால் பயணிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் எனவும் எச்சரித்துள்ளார்.

குருநாகலில் உள்ள ரயில் நிலைய அதிபர் சங்க காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடைந்ததைத் தொடர்ந்து பயணிகள் ரயில் சேவை மாகாண எல்லைக்குள் மாத்திரம் வரையறுத்ததாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ரயில் போக்குவரத்துச் சேவையின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சுகாதாரப் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வகுக்கப்படவில்லை.

ரயில் பருவகால அட்டை உள்ளவர்களுக்கு மாத்திரம் ரயில் சேவையைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பருவகால அட்டையில்லாதவர்கள் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும்போது பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

ஆசன ஒதுக்கல் முறைமை ஊடாகப் பயணிகள் ரயில் போக்குவரத்துச் சேவையை ஆரம்பிக்குமாறு ரயில் திணைக்களத்துக்குப் பலமுறை ஆலோசனை வழங்கியுள்ளோம் என்றார்.