பங்காளி கட்சியினர் அரசாங்கத்திலிருந்து தாராளமாக வெளியேறலாம் – பொதுஜன பெரமுன

1567226321 SLPP 2
1567226321 SLPP 2

அரசாங்கத்தில் இருக்க வேண்டுமாயின் அரசாங்கத்தை விமர்சிக்காமல் அரசாங்கத்தை பாதுகாக்கும் செயற்பாடுகளை பங்காளி கட்சியினர் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு முடியாவிடின் பங்காளி கட்சியினர் அரசாங்கத்திலிருந்து தாராளமாக வெளியேறலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராட்சி தெரிவித்தார். சமகால அரசியல் நிலவரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் ஸ்ரீ லங்கா பொதுஜனமுன கட்சியினால் தான் நாடாளுமன்றிற்கு தெரிவானார்கள்.

பங்காளி கட்சியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிடாமல், தனித்து போட்டியிட்டிருந்தால் நிச்சயம் மக்களினால் புறக்கணிக்கப்பட்டிருப்பார்கள்.

அரசாங்கத்தின் கொள்கைக்கும்,நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்கும் அரசாங்கத்தில் உள்ள பங்காளி கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ந்து தடையாக செயற்படுகிறார்கள். இவர்களின் செயற்பாடுகளின் காரணமாக மக்கள் மத்தியில் அரசாங்கம் குறித்து தவறான நிலைப்பாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பதால் எவ்வித பயனும் இரு தரப்பினருக்கும் ஏற்படாது. பங்காளி கட்சியினர் அரசாங்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசாங்கம் தொடர்ந்து செயற்படும்.

சேதன பசளை செயற்திட்டத்திற்கு எதிராக திட்டமிட்ட வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. உரம் இல்லாத போது ‘உரம் வேண்டும், உரம் வேண்டும்’ என போராடியவர்கள் உரம் இறக்குமதி செய்யப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள போது ‘இரசாயன உரம் வேண்டும்’ என போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.

விவசாயிகளின் போராட்டம் அரசியல்மயப்படுத்தப்பட்டு விட்டது. சேதன பசளைகளை கொண்டு விவசாயத்தில் ஈடுப்படுவோம் என்ற தீர்மானத்தில் விவசாயிகள் இல்லாமல் பயனற்ற வகையில் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள். எக்காரணிகளுக்காகவும் இரசாயன உரம் இறக்குமதி செய்யப்பட மாட்டாது.

அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கும் பங்காளி கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்திடம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம் என்றார்.