சமையல் எரிவாயுவிற்கு மீண்டும் தட்டுப்பாடு!

gas 2
gas 2

நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அதனால் எழுந்த சர்ச்சையின் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது மீண்டும் கடந்த ஒருவார காலமாக சமையல் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

அதற்கமைய லாப் மற்றும் லிட்ரோ ஆகிய இரு சமையல் எரிவாயுவிற்கும் சந்தையில் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இவை இரண்டில் ஒன்றையேனும் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை மீண்டும் ஏற்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறான நிலைமைக்கு மத்தியிலும் நாளாந்தம் 300 – 400 தொன் எரிவாயு சந்தைகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் லாப் சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யு.கே.எச்.வேகபிட்டி தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் டொலர் பற்றாக்குறை காரணமாக எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. கடன் சான்று பத்திரத்தை விடுவித்துக் கொள்வதற்காக வங்கிகளை தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் லாப் சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லாப் மற்றும் லிட்ரோ ஆகிய இரு சமையல் எரிவாயுவையும் பெற்றுக் கொள்வதில் சிக்கல் காணப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்ற போதிலும் , ‘தாம் போதுமானளவு சந்தைக்கு எரிவாயுவை விநியோகிப்பதாகவும் , லாப் சமையல் எரிவாயு பற்றாக்குறையின் காரணமாக லிட்ரோ எரிவாயுவிற்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும்’ லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.