தர்மம் தழைப்பதற்கும் அதர்மம் அழிவதற்கும் கொண்டாடும் திருநாளே தீபாவளி!

vikki
vikki

தர்மம் தழைப்பதற்கும் அதர்மம் அழிவதற்கும் கொண்டாடுவதற்கான திருநாளே தீபாவளித் திருநாள் ஆகும். எமது இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஒளியேற்ற வேண்டி இத் திருநாளில் எனது தீபாவளி வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன். வானில் பருவப்பெயர்ச்சியின் கரு மேகங்கள் மட்டுமன்றி அரசியல் வானிலும் கருமேகங்கள் சூழ்ந்து வருகின்றன. விரைவில் ஒளிக் கீற்றுக்கள் எம்மைப் பார்த்துச் சிரிக்க வேண்டி பிரார்த்திக்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இவ்வருட தீபாவளி ஒளியை அரசியல் வானிலும் கொண்டுவர வேண்டும். இத் தீபாவளித் தினத்தில் புதிய உடுபுடைவைகள் வாங்குதல், ஆபரணங்கள் வாங்குதல், கோவில்களுக்கு கூட்டம் கூட்டமாகச் செல்லுதல், சுற்றத்தார் உறவினர் நண்பர்கள் வீடுகளிற்குச் செல்லுதல் ஆகிய வழக்கங்களை இம்முறை நாம் தவிர்த்து வீட்டில் இருந்து வழிபாடு செய்து குழந்தை குட்டிகளுடன் ஆனந்தமாக பொழுதைக் களிப்போமாக!

கொரோனா என்னும் கொடிய அரக்கன் தலைவிரித்தாடுகின்ற இச் சந்தர்ப்பத்தில் நாம் சமூக இடைவெளிகளைப்
பேணி வீட்டில் இருந்தவாறே இத் திருநாளைக் கொண்டாடுவதன் மூலம் எம்மையும் எமது குடும்ப உறுப்பினர்களையும் மற்றும் இரத்த உறவுகள் நண்பர்களையும் இத் தொற்றில் இருந்து பாதுகாக்க வழி வகுக்கலாம்.

எமது சிறார்கள் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் தற்போது தான் பாடசாலைக்குச் சென்று தமது கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்திருக்கின்றார்கள். எனவே எமது தேவையற்ற ஒன்று கூடல்கள் களியாட்டங்கள் மற்றும் பொறுப்பின்மைகள் மீண்டுமொரு பெருந்தொற்றுக்கு வழிவகுக்கும் என்பதால் அனைவரையும் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன். எதிர்வரும் ஆண்டுகளிலாவது எமது மக்கள் இப் பெருந்தொற்றிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடன் இத்திருநாளைக் கொண்டாட இறைவனை வேண்டி உங்கள் அனைவரையும் வாழ்த்துகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.