ஜனாதிபதியின் மனநிலையை ஞானசார தேரரின் தெரிவு வெளிப்படுத்தியுள்ளது – ஜே.வி.பி

VIJITHA HERATH
VIJITHA HERATH

அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காகவே ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. 

ஞானசார தேரரைப் போன்ற ஒருவரை இதன் தலைவராக நியமித்துள்ளதன் மூலம் ஜனாதிபதியின் மன நிலையை தெளிவாக உணர முடிகிறது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்கம் அதன் இயலாமையை மறைக்க முற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தும் ஆயுதத்தையே மீண்டும் கையிலெடுத்துள்ளது. 

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி உண்மையான பிரச்சினைகளை மூடி மறைக்கும் அரசாங்கத்தின் சதி அரசியலுக்கு மக்கள் இரையாகி விடக் கூடாது என்றும் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் புதன்கிழமை (3)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பால்மா, சமையல் எரிவாயு, சீமெந்து மற்றும் சீனி என அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் மக்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், அவற்றை மூடி மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் அதன் இயலாமையை மறைக்க முற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தும் ஆயுதத்தையே மீண்டும் கையிலெடுத்துள்ளது. 

2019 இல் இனவாதத்தை தூண்டியதைப் போலவே தற்போது இந்த செயலணியின் ஊடாக இனவாதத்தையும் , மதவாதத்தையும் தூண்டிவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஞானசார தேரரை இதன் தலைவராக நியமித்துள்ளமையின் மூலம் அரசாங்கத்தின் நோக்கம் தெளிவாகிறது. 

செயலணியின் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை அவரது தவறல்ல. ஆனால் அவரை தலைவராக நியமித்துள்ளதன் மூலம் ஜனாதிபதியின் மனநிலை எவ்வாறு என்பது தெளிவாகிறது. எனவே தற்போது அவரது மூளையை சோதிக்க வேண்டியேற்பட்டுள்ளது.

ஆயுட்காலம் முழுவதும் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கினார். 

தற்போதைய ஜனாதிபதி அவரை செயலணியின் தலைவராக நியமித்துள்ளார்.  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்காத அரசாங்கம் , அருட் தந்தை சிறில் காமினியை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துள்ளது.

தன்னை கைது செய்யாமலிருப்பதற்கு அருட்தந்தை சிறில் காமினி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார். 

அவர் கைது செய்யப்படுவாராயின் கத்தோலிக்க மக்கள் நிச்சயம் வீதிக்கு இறங்கி கடும் எதிர்ப்பை வெளியிடுவர். 

இதன் மூலம் பௌத்த மக்களுக்கும் கத்தோலிக்க மக்களுக்கும் முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கும் , வேறு வழிகளில் முஸ்லிம் மக்களுக்கும் பௌத்த மக்களுக்கும்  முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் முயற்சிக்கிறது. 

அரசாங்கத்தின் இவ்வாறான சதி அரசியலுக்கு மக்கள் இரையாகி விடக் கூடாது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றோம் என்று தெரிவித்தார்.