சீரற்ற வானிலையால் தொடரும் சேதங்கள் : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை

fea01
fea01

சீரற்ற வானிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பிற்பகல் வேளைகளில் இடைவிடாது பெய்துவரும் கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறியளவிலான மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

லிந்துலை மெராயா பகுதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்ததால் விவசாய நிலங்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில் 25 வீடுகள் வெள்ள நீரினால் நிரம்பியதுடன் மேலும் சில வீடுகளுக்குள் சிறிதளவு வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

வீட்டிற்கு அருகில் உள்ள மேல்கொத்மலை நீர்தேகத்திற்கு நீர் வழங்கும் எல்ஜீன் ஆற்றில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளதால் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்டோர் உறவினர்கள் வீடுகளிலும், அயலவர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

டயகம பிரதேசத்திலிருந்துவரும் ஆகர ஆறு பெருக்கெடுத்ததால் டயகம, அக்கரப்பத்தனை, மன்றாசி, திஸ்பனை, ஆகர ஓயா, நாகசேனை, லிந்துலை ஆகிய பிரதேசங்களில் உள்ள தாழ்நில பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ள நீரினால் மூழ்கியுள்ளன.

இப்பிரதேசங்களில் விவசாய காணிகள் முற்றாகப் பாதிப்படைந்துள்ளன.

இதேவேளை, நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை(04) வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இன்று(03) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களின் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் எல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, பல நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகலை, ரன்தெம்பே, மகாவலி மற்றும் உடவளவ ஆகிய நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக மகாவலி கங்கையின் இரு மருங்கிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.