நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை குறைப்பதால் பணத்தை சேமிக்கலாம்!

dayasiri
dayasiri

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக, பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்தால், எரிபொருளுக்காகச் செலவிடப்படும் பெருமளவான பணத்தை சேமிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஜாவத்தை பகுதியில் நேற்று (04) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக்காகத் தமது வாகனத்துக்குப் பின்னால் பயணிக்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த காலத்தில் இருந்ததைப் போன்று, அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தற்போது பாதுகாப்பு அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிகூட, தம்முடன் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், பாதுகாப்பு வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்களாயின், அவர்கள் தற்போதைய சந்தர்ப்பத்தில் அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.