கொழும்பில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் விண்ணதிரக் கோஷம்!

sajith
sajith

“இது ஆரம்பம் மட்டுமே. மக்களின் வாழும் உரிமை உறுதிப்படுத்தப்படும்வரை போராடுவோம். உயிர்த் தியாகம் செய்வதற்கும் நாம் தயார்.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சூளுரைத்தனர்.

விவசாயம் அழிப்பு, பொருட்களின் விலையேற்றம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் அரச எதிர்ப்புப் போராட்டம் கொழும்பில் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காவல்துறை உள்ளிட்ட அரச படைகளின் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் பெருந்திரளான மக்கள் கொழும்பு நோக்கி வந்து நிவாரணம் வேண்டும், வாழ்க்கைச்சுமை குறைக்கப்பட வேண்டும், நாட்டு வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், உரப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு முன்னால் பேரணி ஆரம்பமாகி, ஹெட் பார்க் மைதானம் வரை சென்று அங்கு கவனயீர்ப்புப் போராட்டத்துடனான கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தப் போராட்டத்தால் கொழும்பிலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.