அங்கொட லொக்காவுடன் தொடர்புடைய இருவருக்கு 5 நாட்கள் தடுப்பு காவல்!

Arrested
Arrested

தமிழகத்தில் மரணித்த இலங்கையின் பாதாள உலகக்குழு தலைவர் அங்கொட லொக்காவுடன் தொடர்புடைய இருவரை 5 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க இந்திய மத்திய குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு கோவை நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

36 வயதான அங்கொட லொக்கா தமிழகத்தின் கோவை, சேரன்மாநகர் பகுதியில், பிரதீப் சிங் என்ற பெயரில், தமது பெண் நண்பியான அம்மானி தான்ஜியுடன் 2018 முதல் இரகசியமாக வசித்திருந்ததாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த வருடம் ஜூலை மாதம் 3 ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.

கோவை அரச மருத்துவமனையில், போலி சான்றிதழ் வழங்கி, அவரது சடலத்தைக் கொண்டுசென்ற அம்மானி தான்ஜி மற்றும் அவரது நண்பர்கள் மதுரையில் அதனை தகனம் செய்தனர்.

இந்நிலையில், இந்திய மத்திய குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த அம்மானி தான்ஜி மற்றும் சடலத்தை தகனம் செய்ய உடந்தையாக இருந்த மதுரையைச் சேர்ந்த சட்டத்தரணி சிவகாமி சுந்தரி, திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில், சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அம்மானி தான்ஜி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அங்கொட லொக்கா, இந்தியாவில் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்த அவரது நண்பர்களைத் தேடி கோவை இந்திய மத்திய குற்றவியல் விசாரணைப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதன்போது, பெங்களுர் – குள்ளப்பா பகுதியில் தலைமறைவாகியிருந்த இலங்கையின் அத்துருகிரியவைச் சேர்ந்த 38 வயதான நலின் சத்துரங்க என்ற சனுக்க தனநாயக மற்றும் பெங்களுர் சுப்பையா பாளையத்தைச் சேர்ந்த 46 வயதான கோபாலகிருஷ்ணன் ஆகியோரை கடந்த 13ஆம் திகதி காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்கள் இருவரையும் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க இந்திய மத்திய குற்றவியல் விசாரணைப் பிரிவு காவல்துறையினர் கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி எம்.சஞ்சீவி பாஸ்கர் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, நலின் சத்துரங்க மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை, 5 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இலங்கையின் பாதாள உலகக்குழு தலைவர் அங்கொட லொக்கா தமிழகம் கோயம்புத்தூரில் மரணித்தமை, மரபணு பரிசோதனையில் அண்மையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் உதவியுடன் அங்கொட லொக்காவின் தாயாரின் மரபணு பெறப்பட்டு தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அங்கொட லொக்காவின் சடலத்தில் இருந்து பெறப்பட்ட மரபணு, அவரது தாயாரின் மரபணுவுடன் பொருந்துவதாக ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.