வவுனியா குளப்பகுதி பூங்கா உட்பட நீர் நிலைகளை நாடுவதில் அவதானம் செலுத்துங்கள்!

IMG 20210618 115651 2 1
IMG 20210618 115651 2 1

வவுனியாவில் தொடர்ச்சியான மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி காணப்படும் நிலையில் வவுனியா மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்பதுடன் குளப்பகுதியில் உள்ள பூங்காவில் படகு சவாரி உட்பட நீர் நிலை விளையாட்டுக்களில் ஈடுபடுவதிலும் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வவுனியா நகரசபை தலைவர் தேசபந்து இ.கெளதமன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில் குளப்பகுதியில் அமைந்துள்ள நகரசபை பூங்கா திறக்கப்பட்டுள்ளதா என வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வவுனியா குளப்பகுதியில் அமைந்துள்ள பூங்கா தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே இதனை தற்போதைய நிலையில் நகரசபை கண்காணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. முற்று முழுதாக ஒப்பந்தகாரரே அதனை பராமரிக்கின்றார். எனவே அங்கு எவ்வாறான நிலை உள்ளது என்பது தொடர்பில் நகரசபை கண்காணிக்க முடியாது. இந் நிலையில் வவுனியா குளம் நீர் நிறைந்துள்ளதால் மக்களே அவதானமாக செயற்பட வேண்டும். நீர் நிலை விளையாட்டுக்கள், படகு சவாரி என்பவற்றில் மிக அவதானம் தேவை. அத்துடன் வவுனியாவில் அனைத்து நீர் நிலைகளும் நீர் நிரம்பியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவும் தெரிவித்துள்ளது. ஆகவே மக்கள் அவ்வாறான நீர் நிலைகள் மற்றும் அதனோடு அண்டிய பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளார்.