பதவிகளுக்கான உட்கட்சி மோதல் தீவிரம்

4dw
4dw

ஐக்கிய தேசிய கட்சிக்குள் பதவிகளுக்கான உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கட்சியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு விட்டுக்கொடுக்க மறுப்பு தெரிவித்து வரும் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரியவை இடைக்கால தலைவராக்க இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதற்கான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக இவ்வாரம் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவைக் கூட்டுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு முன்னதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் கடந்த திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்திய ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரியவை இடைக்கால தலைவராக்குவதற்கான சம்மதத்தைப் பெற்றுக் கொண்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் எதிர்கால தலைமைத்துவம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வதற்காக நடத்தப்பட்ட கூட்டங்களில் பங்கேற்க வருமாறு சஜித் பிரேமதாசவுக்குப் பல முறை அழைப்பு விடுத்திருந்தபோதிலும், அவர் எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.

தேர்தல் தோல்வியோடு கட்சியின் பிரதித் தலைவர் பதவியை இராஜினாமா செய்த சஜித் பிரேமதாச, தலைவரைச் சந்திக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார்.

அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் தீர்மானித்திருக்கும் நிலையில் கட்சியின் தலைமைத்துவத்தை வழங்கினால் மாத்திரமே பிரதமர் வேட்பாளராகக் களமிறங்குவதாகவும் சஜித் பிரேமதாச திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

இந்தப் பின்னணியில், கரு ஜயசூரியவை இடைக்கால தலைவராக்கி, அவரைப் பிரதமர் வேட்பாளராகக் களமிறக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, செயற்குழுவினரின் ஆதரவையும் நாடிக் கொண்டிருக்கிறார் என்றும்  கூறப்படுகிறது.

இதேவேளை, இடைக்கால தலைவராகத் தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்க இணக்கம் தெரிவித்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க, பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஏனைய நிர்வாகப் பொறுப்புகளில் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பின்படி, தற்போதைய தலைவர் பதவியை இராஜினாமா செய்தால் மட்டுமே புதிய தலைவர் ஒருவரைத் தெரிவு செய்ய முடியும். இல்லையேல், எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுவரை ரணில் விக்கிரமசிங்கவே தலைவராகத் தொடர்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது