அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உயர்ஸ்தானிகருக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி

Parliment AR 1
Parliment AR 1

ஆறு இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்துக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன அவர்களின் தலைமையில் நேற்று இடம்பெற்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் தென்னாபிரிக்காவுக்கான உயர்ஸ்தானிகராக பேராசிரியர் காமினி குணவர்தன அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வணிக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக எம்.என்.பி. ஹபுஹின்ன அவர்களுக்கும், களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக டி.டி. மாதரராச்சி அவர்களுக்கும் உயர் பதவிகள் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

கம்பனி தோட்டங்களை மறுசீரமைத்தல், தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கைகள், தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்துதல் மற்றும் தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஜே.எம். திலகரத்ன பண்டா அவர்களையும், சமூக காவல்துறை சேவைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக எஸ்.டீ. கொடிகார அவர்களையும் நியமிப்பதற்கு இந்தக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அறநெறிப் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் பிக்குமார் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளராக எஸ்.எச். ஹரிஸ்சந்ர அவர்களை நியமிப்பதற்கும் சூரியசக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக கே.எச்.டி.கே. சமரகோன் அவர்களை நியமிப்பதற்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, கெஹெலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.