மணலாறு, சூரியனாறு பகுதியை மகாவலி அபகரிக்க முயற்சிக்கின்றது – ரவிகரன்

Thurairasa Ravikaran Former Northern Provincial Council Member Pottuvil To Poligandy Protest Today Jaffna News. 1 1
Thurairasa Ravikaran Former Northern Provincial Council Member Pottuvil To Poligandy Protest Today Jaffna News. 1 1

தமிழர்களின் பூர்வீக பகுதியான மாணலாறு, மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பாளர்களினால் விழுங்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் மாணலாறு – சூரியனாறு பகுதியிலுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆக்கிரமித்து அப்பகுதிக்கு கலம்பவெவ எனப் பெயரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந் நிலையில்
தற்போது சூரியனாறு பகுதியிலுள்ள தமிழ் மக்களின் ஏனைய காணிகளையும் அபகரிப்பதற்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை முனைப்புக்காட்டி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது தமிழர்களின் வரலாற்றுப் பூமியான மணலாறு மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பாளர்களால் விழுங்கப்படுகின்றது.

மணலாற்றில் ஏற்கனவே வெலிஓயா என்ற பிரிவு உருவாக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது அனைவரும் அறிந்தவிடயம்.

குறிப்பாக அனுராதபுர மாவட்டத்தின் ஒரு பகுதியையும்,  திருகோணமலை மாவட்டத்தின் ஒரு பகுதியையும், வவுனியா வடக்கின் ஒரு பகுதியையும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தின் வளமான பூர்வீக மணலாற்றுப் பூமிகளையும் உள்ளடக்கி வெலிஓயா உருவாக்கப்பட்டது.

இவ்வாறாக உருவாக்கப்பட்ட வெலிஓயாவின் மொத்த நிலப்பரப்பு இருபத்தெட்டாயிரத்துத் தொள்ளாயிரம் (28,900)ஏக்கர் என அறியக்கூடியதாக இருக்கின்றது.

ஒன்பது கிராம அலுவலர் பிரிவுடன் இந்த வெலி ஓயா பிரதேசம் உருவாக்கப்பட்டிருப்பதோடு மாத்திரமின்றி, முல்லைத்தீவு மாவட்டத்துடன் இந்த வெலிஓயா பகுதி இணைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கலம்பவெவ எனப் பெயரிட்டு சூரியனாற்றுப் பகுதியிலுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அபகரித்திருந்தது.

அவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகளுக்கு மேலதிகமாக, சூரியனாற்றுப் பகுதியிலுள்ள தமிழர்களின் காணிகளை அபகரிப்பதற்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை முயற்சி எடுப்பதாக தெரிகின்றது.

குறிப்பாக ஏற்கனவே கடந்த 1970ஆம் ஆண்டில் 190 பயனாளிகளுக்கு 10ஏக்கர்வீதம் வழங்கப்பட்டிருந்த காணிகளையே தற்போது வெலிஓயா பகுதியுடன் இணைக்கும் நோக்குடன் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை முனைப்புக்காட்டிவருவதை அவதானிக்கக்கூடியதாகவிருக்கின்றது.

இதனால் எங்களுடைய தமிழ்ப் பிரதேசங்கள் ஏற்கனவே அபகரிக்கப்பட்டிருப்பதைவிட,  மெல்லமெல்ல மேலதிகமாக தமிழர்பகுதிகள் தொடர்ந்தும் அபகரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு தென்னமரவடி, அக்கரைவெளி, பெரியவெளி, எரிச்சகாடு, அம்பட்டன்வாய்க்கால், கோட்டைக்கேணி, கொக்குத்தொடுவாய் நோக்கி சுமார் 16கிலோமீற்றர் பாதையை மறுசீரமைப்புச்செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை தென்னமரவடிமக்களும், கொக்குத்தொடுவாய்பகுதி விவசாயிகளும் முன்வைத்திருந்தனர். குறிப்பாக முதலாவது வடமாகாணசபை இயங்கிய காலத்தில்கூட இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டிருந்து.

அதன் தொடர்ச்சியாக வயல் நிலங்களில் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக குறித்த வீதியை மறுசீரமைப்பு செய்துதருமாறு அங்குள்ள கமக்கார அமைப்புக்களாலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அந்தவகையில் பறையனாறு 150மீற்றர் தூரமுள்ள இடமும், விளாத்தியடி இறக்கம் 40மீற்றர் தூரமுள்ள இடமும், சூரியனாறு 70மீற்றருக்கும் மேற்பட்ட தூரமுள்ள இடமும், சலப்பையாறு 200மீற்றருக்கு மேற்பட்ட இடமும் அங்கு காணப்படுவதாகச் சுட்டிக்காட்டி சீரமைப்புச்செய்துதருமாறு கோரியிருந்தனர்.

இந்நிலையில் அந்தவீதிக்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டதுடன், அண்மையில் அந்த வீதிக்குரிய மறுசீரமைப்பு வேலைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இவ்வாறிருக்கும்போது தற்போது அந்தப் பகுதியிலுள்ள தமிழ் மக்களுக்குரிய நிலங்கள் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே அங்குள்ள எமது தமிழ் மக்களுக்குரிய காணிகள் அனைத்தையும் சிங்கள மக்களுக்கு வழங்கும் நோக்குடன் அல்லது, அப்பகுதியிலுள்ள தமிழர் நிலங்களை வெலிஓயாவுடன் இணைத்து அபகரிக்கும் நோக்குடன்தான் அங்கு மறுசீரமைப்பு பணிகளையும் தற்போது முன்னெடுத்திருக்கின்றனர் என்றே எம்மால் உணரக்கூடியதாகவிருக்கின்றது.

இவ்வாறாக எங்களுடைய தமிழ் மக்களின் பூர்வீக நிலப்பரப்புக்களை மெல்லமெல்ல விழுங்கிக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த 1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது தமிழ் மக்களுக்கு வளங்கப்பட்ட காணிகளை பறிக்கும் நோக்குடனும், அக்காணிகளில் சிங்கள மக்களை குடியேற்றும் நோக்குடனும், ஏற்கனவே அபகரிக்கப்பட்டு சிங்களமக்களை குடியேற்றியுள்ள வெலிஓயா பகுதியுடன் சூரியானற்றையும் இணைக்கின்ற வகையிலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையிவ் சூரியனாற்று பகுதியிலுள்ள காணிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் முல்லைத்தீவு மாவட்டசெயலரிடம் கடிதம்மூலம் கோரியுள்ளதாக அண்மையில் ஊடகங்களின் ஊடாக அறியக்கூடியதாகவிருந்தது.

இவ்வாறான அபகரிப்புச் செயற்பாட்டின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்திலிள்ள தமிழ் மக்களின் இருப்பை அழிக்கப்போகின்றார்களா? -என்றார்