கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையக் கட்டுமான பணிகள் ஜனவரியில் ஆரம்பம்!

rogitha
rogitha

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையக் கட்டுமான பணிகளை இந்தியாவின் அதானி குழுமம் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதத்தில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி தொடர்பில் இந்தியாவின் அதானி குழுமத்துடன்  உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் உள்நாட்டு முகவரான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் இந்தியாவின் அதானி குழுமம், நிர்மாணித்தல், செயற்படுத்தல், பரிமாற்றல் அடிப்படையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் 700 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தியாவின் அதானி கூட்டு நிறுவனம் ஜப்பானுடன் இணைந்து கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய முன்னதாக யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்புக்களால் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பினால் அந்த  முயற்சி கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.