கொழும்பு துறைமுகத்தின் 13 ஏக்கர் காணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் திட்டம் : திஸ்ஸ அத்தநாயக்க

tissa attanayake
tissa attanayake

அரசாங்கம் டொலர் பெற்றுக்கொள்வதற்காக எமது வளங்களை முதலீடு என்ற பெயரில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றது. 

குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் 13 ஏக்கர் காணியை 150 டொலர் மில்லியனுக்கு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இது எந்தவித கேள்விக்கோரலும் இல்லாமலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

முதலீடு என்பது வளங்களை விற்பனை செய்வதல்ல என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு, நீர்வழங்கல் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

நாட்டின் துறைமுகங்கள் தேசிய வருமானத்தின் கேந்திர நிலையங்களாகும். குறிப்பாக கொழும்பு துறைமுகம்  தெற்காசியாவில் மிகவும் முன்னணியில் இருக்கின்றது. அது எமது தேசிய வருமானத்துக்கு பெரும் சக்தியாகும். 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய பல முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இறுதியில் இந்த அரசாங்கம் கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய முற்பட்டபோது அதற்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஏற்பட்டது. 

அதனால் அரசாங்கம் அந்த தீர்மானத்தில் இருந்து பின்னுக்கு சென்றது. என்றாலும் தற்போது அரசாங்கம் கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்திக்கு என்ன நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதை தெரிவிக்க வேண்டும்.

மேலும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கி 325 டொலர் மில்லியன் கடன் பெறுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. 

அரசாங்கத்திடம் டொலர் பற்றாக்குறை இருந்து வருகின்றமையே இதற்கு காரணமாகும். கிழக்கு துறைமுகத்தின் மொத்த நீளம் 1360 மீற்றராகும். அதில் 600 மீற்றரே அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றது. 

எஞ்சிய பகுதியை விரைவாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால், எமது கடலை சுற்றி முனையங்கள் உருவாகினால் சர்வதேச ரீதியில் முன்னணியில் இருக்கும் எமது துறைமுகம் இல்லாமல்போகும். 

இந்த முனையத்துக்கு தேவையான பாரம் தூக்கிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து காலம் கடந்து செல்கின்றது. முனையத்துக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் பின்வாங்குவது இந்த முனையத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கா? என்ற சந்தேகம் எழுகின்றது.

மேலும் அரசாங்கம் டொலர் பெற்றுக்கொள்வதற்காக எமது வளங்களை முதலீடு என்ற பெயரில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றது. குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் 13ஏக்கர் காணியை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரம் சர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. 

இந்த காணியை அபிவிருத்தி செய்து இலாபமீட்டும் நடவடிக்கையை துறைமுகத்துக்கு செய்ய முடியும். அவ்வாறு இருந்தும் 150 டொலர் மில்லியனுக்கு தனியார் நிறுவனத்துக்கு முதலீடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. 

எந்தவித கேள்விக்கோரலும் இல்லாமல் 70 வீதம் குறித்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கி இருப்பதுடன் அதில் 15வீதம் தேசிய முதலீட்டாளருக்கு வழங்குவதாக தெரிவித்திருக்கின்றது. ஆனால் அந்த தேசிய முதலீட்டாளர் யார்? என்பதை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை.

எனவே இவ்வாறு தொடர்ந்து துறைமுகத்தின் வளங்களை விற்பனை செய்துவந்தால் எமக்கு என துறைமுகம் இருக்காது. முதலீடு என்பது வளங்களை விற்பனை செய்வதல்ல. கடந்த அரசாங்கங்களும் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கி இருக்கின்றன.

ஆனால் விற்பனை செய்யவில்லை. அதனால் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் என்பது தங்க பூதம். அதனை அபிவிருத்தி செய்து தேசிய வருமானத்தை அதிகரித்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.