காவல் செய்வதற்கான பூஜை செய்யச் சென்று தாலிக்கொடி, சங்கிலி கொள்ளை!

Gold Price 1
Gold Price 1

மட்டு காத்தான்குடி காவல்துறை பிரிவிலுள்ள தாளங்குடா பிரதேசத்தில் வீடு ஒன்றில் காவல் செய்வதற்கான பூஜை செய்யச் சென்று அங்கிருந்த தாலிக்கொடி, தங்கசங்கிலி உட்பட சுமார் 10 இலச்சம் ரூபா பெறுமதியான 7 கால் பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற பெண்பூசாரி ஒருவரை  இன்று வெள்ளிக்கிழமை (10) கைது செய்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் தமது வீட்டை காவல் செய்வதற்கான சடங்கு பூஜை ஒன்றை செய்வதற்காக சம்பவதினமான கடந்த 8 ம் திகதி புதன்கிழமை கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்பூசாரியை வரவழைத்து இரவில் தங்கவைத்து பூஜை  நடவடிக்கை இடம்பெற்ற பின்னர் காலையில் பெண்பூசாரி அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் வீட்டின் அலுமாரியில் கழற்றி வைத்திருந்த 6 பவுண் நிறை கொண்ட தாலிக்கொடி, ஒரு பவுண் நிறை கொண்ட தங்க சங்கிலி, கால் நிறை பவுண் கொண்ட மோதிரம் திருட்டுப்போயிருந்துள்ளது. 

இதனையடுத்து காத்தான்குடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து காவல் நிலைய பெருங்குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை பொறுப்பதிகாரி வை. விஜையராஜா தலைமையிலான காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்ட நிலையில் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த 31 வயதுடைய பெண்பூசாரியை கைது செய்ததுடன் அவர் திருடிச்சென்ற தங்க ஆபரணங்களை ஈடுவைத்து பினான்ஸ் கொம்பனி மற்றும் தங்க நகைகடைகளில் இருந்து கொள்ளையிட்ட தங்க ஆபரணங்களை மீட்டனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட பெண் பூசாரி அக்கரைப்பற்று, கொக்கட்டிச்சோலை, களுவாஞ்சிக்குடி காவல் நிலையங்களில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் வழக்கு தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.