குறிஞ்சாக்கேணி விபத்து – அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த இருவர் கைது!

1639195052 arrest 02
1639195052 arrest 02

கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவை படகு விபத்தின் போது வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பிரதான சந்தேக நபர்கள் இருவரை இம் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரஸாக் பயாஸ் நேற்று (10) உத்தரவிட்டார்.

குறிஞ்சாக்கேணி மற்றும் காக்காமுனை பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவை படகு கவிழ்ந்ததில் எட்டு பேர் உயிரிழந்த நிலையில் அங்குள்ள இளைஞர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

இதன்போது வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதுடன் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது மாத்திரமன்றி ஊடகவியலாளர்களை தாக்கியதுடன் அவர்களின் கையடக்கத் தொலைபேசிகளையும் திருடிச் சென்றனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் தொடர்பில் கிண்ணியா காவற்துறையினர் மற்றும் புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.