தொழிற்சங்க நடவடிக்கையில் நோயாளிகள் பாதிப்பு!

202105260653173661 Tamil News Tamil News No home isolation for Covid patients in rural SECVPF
202105260653173661 Tamil News Tamil News No home isolation for Covid patients in rural SECVPF

உள்ளக பயிற்சியை நிறைவு செய்து வைத்திய நிபுணத்துவதிற்காக காத்திருக்கின்றவர்களுக்கான இடமாற்று பட்டியலை வெளியிடுவதில் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முணசிங்கவின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் 5 மாவட்டங்களில் இன்று தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய இரத்தினபுரி, நுவரெலியா, பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்ற சகல வைத்தியசாலைகள், ஏனைய சுகாதார நிலையங்கள் என்பவற்றில் இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை எனில், எதிர்வரும் நாட்களில் மாகாண மட்டத்திலும், பின்னர் நாடளாவிய ரீதியிலும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இன்று காலை 8 மணிமுதல் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இதன் காரணமாக இரத்தினபுரி, நுவரெலியா, பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் வைத்தியசாலை செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தன. இதன் காரணமாக சிகிச்சைக்காக வருகை தந்திருந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

‘அதிகாலை 3 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருகை தந்து காத்திருந்ததாகவும், பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை என்பதால் சிகிச்சையளிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டு தாம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும்’ நோயாளர்கள் விசனம் தெரிவித்தனர். 

‘இவர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். ஆனால் இறுதியில் நாமே அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.’ என்றும் வைத்தியசாலைகளுக்கு வருகை தந்த நோயாளர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போது,

‘இடமாற்று சபையூடாக நடைமுறைப்படுத்தப்படவிருந்த இடமாற்ற நடைமுறைகளை மறந்து, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தன்னிச்சையாக செயற்படுகின்றனர். அதே போன்று பின்தங்கிய பகுதிகளுக்கு வைத்தியர்களை பணிக்கமர்த்தல், வைத்தியர்களின் தேவைகளைப் போலவே , நோயாளர் மற்றும் வைத்தியசாலைகளின் தேவைகளையும் முற்றாக மறந்து தமக்கு தேவையானவர்களுக்கு தேவையான முறையில் செயற்பட்டமையின் காரணமாக இந்த பிரச்சினை உருவாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் முடிவிற்கு அமைய இந்த தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்வதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். சுகாதார அமைச்சு சாதகமான தீர்வை வழங்காவிட்டால் 5 மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை நாடாளாவிய ரீதியிலானதாக மாறும். ‘ என்றார்.