பொது ஆவணத்தில் கைச்சாத்திடுவது தொடர்பான இன்றைய சந்திப்பு இறுதி முடிவின்றி நிறைவு!

999 1
999 1

தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான இன்றைய சந்திப்பு, பொது ஆவணத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படாமல் நிறைவடைந்தது.

தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான மூன்றாம் கட்ட சந்திப்பு, கொழும்பில் இன்று இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா உள்ளிட்ட 12 கட்சிகளின் தலைவர்கள் இன்றைய சந்திப்பில் பங்கேற்றனர்.

இன்றைய கூட்டத்தில், சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டிணைந்த செயற்பாட்டுக்கான பொது ஆவணத்தில் கையொப்பமிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், அது குறித்து இன்று இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் இணைந்து செயற்படுவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத்தை ஆராய நிபுணர்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழு, குறித்த ஆவணத்தை ஆராய்ந்து திருத்தம் செய்து, முழுமையான ஆவணமாக கையளித்ததன் பின்னர், பிறிதொரு தினத்தில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கையொப்பமிட இன்றைய சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.