போலி நாணயத்தாள் குறித்து எச்சரிக்கை அவசியம் – மத்திய வங்கி

central bank
central bank

நாடளாவிய ரீதியில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளமையால் அது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை மத்திய  வங்கி அறிவுறுத்தியுள்ளது.

சந்தேகத்திற்கிடமான நாணயத்தாள் ஒன்று காணப்படுமாயின் அதில் பாதுகாப்பு சின்னம் தொடர்பில் ஆராய்வதற்கும், அதனை வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

அதனையடுத்து நாணயத்தாளை கொண்டு வந்த நபர், அவரது தோற்றம், வாகனத்தில் வருகை தந்திருந்தால் வாகனம் தொடர்பான தகவல்கள், நாணயத்தாள்களின் பெறுமதி மற்றும் வரிசை எண் உள்ளிட்ட தகவல்களை அருகிலுள்ள காவல் நிலையத்தில் அல்லது குற்ற விசாரணைப் பிரிவில் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறில்லை எனில் 011-2422176 மற்றும் 011-2326670 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அதன் ஊடாகவும் தகவல் வழங்க முடியும். 

போலியான நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருத்தல் அல்லது அச்சிடுதல் என்பன சிறை தண்டனைக்குரிய குற்றமாகும் என்று காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் காணப்படும் பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு இவ்வாறு போலி நாணயத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் என்பன அதிகரிக்கக் கூடும் என்பதால் இது தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறைமா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.