யாழ்.பல்கலையில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்!

jaffna uni 1
jaffna uni 1

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2019 மே 3 ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் உள்ள சான்றுப்பொருள்களை ஒப்படைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு மே 3 ஆம் திகதி இராணுவத்தினர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திலும், விடுதிகளிலும் சோதனைகளை முன்னெடுத்தனர்.

இந்த தேடுதலின் போது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் படம், மற்றும் அந்த இயக்கம் சார்ந்த சில பதாதைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கோப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் காவல்துறையினரால் யாழ்ப்பாணம் நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யும் விண்ணப்பத்தை நிராகரித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய, உத்தரவு மீது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

நான்கு குற்றச்சாட்டுகளில் மேன்முறையீட்டு நீதிமன்றால் மட்டும் பிணை வழங்கக் கூடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டை மீளப்பெறுமாறு கோப்பாய் காவல்துறையினருக்கு சட்டமா அதிபரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் 13 நாட்களின் பின்னர் 2019 ஆம் ஆண்டு மே 16 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சுமார் 30 மாதங்களின் பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.