கிளிநொச்சி வயோதிபப் பெண்ணின் கொலை தொடர்பில் வெளியான தகவல்கள்!

download 51
download 51

கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் காணாமல்போயிருந்த வயோதிபப் பெண் ஒருவர் உரப்பையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் 22 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்பெண் வீட்டில் இருந்த போது அவரை கொலை செய்து, சடலத்தை உந்துருளியில் எடுத்துச்சென்று, கந்தபுரத்திலுள்ள பாலமொன்றுக்கு கீழ் வீசிச் சென்றதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதற்கமைய, மேற்படி பாலத்துக்கு கீழிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

லண்டனில் தமது மகனுடன் வசித்து வந்த இராசேந்திரம் இராசலட்சுமி என்ற 67 வயதான குறித்த பெண், 3 வருடங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியுள்ளார்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியைப் பராமரிப்பதற்காக, வாடகை வீடொன்றில் அவர் தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனிமையில் வசித்துவந்த குறித்த பெண், கடந்த 27 ஆம் திகதி வங்கிக்கு சென்று வீடு திரும்பியிராத நிலையில், அது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

உயிரிழந்த பெண்ணிடம் இருந்து தங்க நகைகளை அபகரிக்கும் நோக்கில் இந்த கொலை இடம்பெற்றிருக்கலாமென காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன், குறித்த பெண்ணிடம் இருந்து பறிக்கப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.