மட்டக்களப்பு வடமுனையில் காடழித்து சட்டவிரோத மணல் அகழ்வு!

WhatsApp Image 2021 12 25 at 16.02.41
WhatsApp Image 2021 12 25 at 16.02.41

மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனை பகுதியில் உள்ள காட்டில் காட்டு மரங்களை வெட்டி சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்றுவருதாகவும் இதனால் சூழல் பாதிப்படைந்து வருவதாக  பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியிலுள்ள மதுறுஓயாவின் ஒருபகுதி பொலன்னறுவை மாவட்டத்திற்கு சொந்தமானதாகவும். மற்றப்பகுதி மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சொந்தமான பகுதியாகவும் உள்ளது.

இந்த நிலையில் மட்டக்களப்பு கிரான் பிரதேச செலகத்தின் கீழ் உள்ள  இந்த ஆற்று பகுதியில் ஆற்று மணல் அகழ்வதற்கு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கபணியகம் அனுமதி வழங்கியுள்ளது. இருந்தபோதும் மணல் அகழ்வில் ஈடுபடுவோர் அனுமதி பெற்ற பகுதியில் சென்று மணல் அகழ்வில் ஈடுபடாது சட்டவிரோதமாக வடமுனை குளத்தினை அண்டிய காட்டுப்பகுதியில் உள்ள காட்டு மரங்களை வெட்டி அங்கிருந்து மணல்களை அகழ்ந்து கொண்டு செல்கின்றனர்.

இவ் செயற்பாட்டில்  தினமும் சுமார் 10 உழவு இயந்திரங்களுக்கு மேல் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குறித்த பகுதி பள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் காட்டுமரங்கள் அழிக்கப்பட்டுவருவதால் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்தனர்.  

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பிடம் முறைப்பாடு தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதியில் மணல் அகழ்வு நிறுத்துமாறம் மற்றும் வெலிகந்தை  ஊத்துச்சேனை வீதியை புனரமைத்து தருமாறு பொதுமக்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்னார் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.