இன்று முதல் பால்மா விலை அதிகரிப்பு!

milk powder
milk powder

இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகளின் விலைகள் இன்று(31) முதல் மீள அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்று 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 400 கிராம் பால்மா பொதியொன்றின் புதிய விலை 540 ரூபாவாகும்.

அத்துடன், ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலை 150 ரூபாவினால் அதிகரிப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்றின் புதிய விலை 1,345 ரூபாவாகும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டது.

நுகர்வோர் விவகார அதிகார சபையால், பால்மாவுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை அடுத்து, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்க பால்மா இறக்குமதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்தன.

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,195 ரூபாவாக உயர்த்தப்பட்டிருந்தது.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதியின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 480 ரூபாவாக உயர்த்தப்பட்டிருந்தது.

அதேநேரம், 400 கிராம் உள்ளுர் பால்மாவின் விலையை, 380 ரூபாவிலிருந்து 470 ரூபா வரையில் அதிகரிக்க மில்கோ நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மீளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், உள்ளுர் பால்மாவின் விலையை அதிகரிக்கும் எதிர்ப்பார்ப்பு தற்போது வரையில் இல்லையென மில்கோ நிறுவன தலைவர் லசந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.