இலங்கையில் தடுப்பில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி அரசுக்கு அறிவுறுத்தல்

593018
593018

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு தமிழக மீனவர்களை தைப்பொங்கல் பண்டிகைக்கு முன்னர் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை மீனவக் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.இராமேஸ்வரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி முதலான மாவட்டங்களைச் சேர்ந்த 68 மீனவர்களை, தாங்கள் பயணித்த படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையானது, 1974 ஆம் ஆண்டு இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது.

எனவே, தமிழக மீனவர்கள் 68 பேரையும் இலங்கையிலிருந்து மீட்டு ஒப்படைக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறித்த நபர் அந்த மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகளான சி.வி. கார்த்திகேயன், எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில், நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மத்திய அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கைதுசெய்யப்பட்டுள்ள 68 மீனவர்களில், சிறுவர்கள் இருவரும் உள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் விடுவிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் அனைவரையும் தைப்பொங்கலுக்கு முன்னதாக விடுவிப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், குறித்த வழக்கு விசாரணையை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.