புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவு படுத்த அமைச்சரவை உப குழு நியமனம்

org 20797201805180428
org 20797201805180428

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவு படுத்துவதற்காக 5 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் 70% மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்ய வேண்டும் என்ற அரசின் கொள்கை நோக்கங்களை அடைவதற்கும் , புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களைத் துரிதப்படுத்துவதற்காகவும், 5 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை உப குழு அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் இந்த அமைச்சரவை உப குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அமைச்சரவை உபகுழுவின் தலைவராக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்பொழுது அடையாளங் காணப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கு ஆர்வமுள்ள முதலீட்டாளர்களில் தகுதியானவர்களை தெரிவு செய்தல், உயர்ந்த பயனுள்ள திட்டங்களை அடையாளங் காணுதல், திட்டங்களை செயற்படுத்துவதற்காக அமுலிலுள்ள சட்டங்கள் மற்றும் தடைகளை அடையாளங் கண்டு நீக்குதல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களினூடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய கட்டமைப்புடன் இணைப்பதற்கான வசதிகளை மேம்படுத்துதல் என்பன குறித்து உப குழு கவனம் செலுத்தும்.

இந்த உபகுழுவின் நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் பற்றிய அறிக்கை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.