யாழ் மந்திரி மனையை காக்குமாறு மக்கள் கோரிக்கை

manthiri
manthiri

யாழ்ப்பாணம் சங்கிலியன் மந்திரிமனை பராமரிப்பு இன்றி எந்தவித கண்காணிப்பும் இன்றி காணப்படுவதன் காரணமாக அதனை காக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரண்டாம் சங்கிலியன் யாழ்ப்பாணத்தின் அடையாளமாக வராலாற்று பதிவுகள் கூறுகின்ற நிலையில் அதற்கான அடையாளச் சின்னங்களாக யாழ்ப்பாணம் முத்திரச் சந்தியில் சங்கிலியன் சிலைஅதன் அருகில் யமுனா ஏரி, சங்கிலியன் தோப்பு மற்றும் மந்திரி மனை என்பன காணப்படுகிறது.

இதில் மந்திரி மனை தவிர்த்த ஏனைய சின்னங்கள் தொல்பொருள் திணைக்களம் மற்றும் யாழ்.மாநகர சபையினால் அடையாளப்படுத்தி பெயர் பலகை நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில் மந்திரி மனை, தொல்பொருள் திணைக்களம் மற்றும் மாநகர சபையின் எந்தவொரு அடையாளப்படுத்தலும் பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது.

ஏற்கனவே தொல்பொருள் சின்னம் என அடையாளப்படுத்தப்பட்ட பெயர் பலகை ஒன்று நிறுவப்பட்டிருந்த நிலையில் தற்போது அப்பெயர்பலகை வர்ணப் பூச்சினால் மறைக்கப்பட்டுள்ளது.

தற்போது பராமரிப்பின்றி காணப்படும் மந்திரிமனைக்குள் காதலர்கள் ஒன்று கூடுவதும், தமது பெயர்களை சுவர்களில் கிறுக்குவதுமாக மந்திரிமனை சமூகப் புரழ்வுக்கு உள்ளாவதாக அருகில் வசிக்கும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

யாழ் மண்ணின் வரலாற்றுச் சின்னம் அழிவதற்கு முன்னர் சம்பந்தபட்ட தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுத்து மந்திரி மனையை காக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.