காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென பிரதமர் அறிவிப்பு

z p09 Mahinda
z p09 Mahinda

காலி முகத்திடல் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் செய்திப்பிரிவு ஒன்று வினவிய போது, எதிர்வரும் காலங்களில் இந்த கலந்துரையாடலை நடத்த தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் ஐந்தாவது நாளாக காலி முகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

நாடளாவிய ரீதியில் உள்ள இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் , தற்போதைய அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி கடந்த 9ஆம் திகதி முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த பகுதியில் கூடாரங்களை அமைத்து இரவு வேளையில் அங்கு தங்கியுள்ளனர்.

அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையொன்றை நிகழ்த்திய போதிலும், தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், தமது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து பதவி விலகுமாறு ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தையும் குடிமக்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ள தோல்வியடைந்த பொருளாதாரத்திற்கு ஜனாதிபதியையும் அவரது ஆட்சியையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.