தங்களை தனி எதிரணியாக அங்கீகரிக்குமாறு சபாநாயகரிடம் 41 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

mahindha yapa vs ranjan
mahindha yapa vs ranjan

தங்களை தனி எதிரணியாக அங்கீகரிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் 41 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆளும் கட்சியிலிருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

நாடாளுமன்றில் ஆசனங்களின் ஒழுங்குப்படுத்தல்கள் தொடர்பிலும் இதன்போது சபாநாயகருக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்கட்சி பக்கம் ஆசனங்களை ஒதுக்குமாறு அவர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் தயாசிறி ஜயசேகர, மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகிய வண்ணவுடன், விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, சுசில் பிரேம ஜயந்த மற்றும் அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் ஏனைய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி இன்றைய சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை, தாங்களும் அரசிலிருந்து வெளியேறியுள்ள சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுடனேயே இணைந்து செயற்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அதன் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஆசன ஒதுக்கம் தொடர்பில் இதுவரை எவ்வித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

அது தொடர்பில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.