கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிப்பு

Ajith Nivard cabraal
Ajith Nivard cabraal

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகுமாறு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும் இன்று அவர் நீதிமன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை.

தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த தனிப்பட்ட மனு தொடர்பில் பூர்வாங்க ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் ஆளுநர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஜீவந்த ஜயதிலக்க மன்றுரைத்தார்.

எனினும், மீண்டும் பிரதிவாதி அஜித் நிவாட் கப்ரால் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டுமென நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்தது.

முதல் தடவையாக மத்திய வங்கியின் ஆளுநராக அவர் கடமையாற்றிய காலத்தில் பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றதாக தென் மாகாண முன்னாள் ஆளுநரால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை முதல் தடவையாக விசாரணை செய்த கொழும்பு நீதவான் நீதிமன்றம்,  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு பயணத்தடை விதித்ததுடன், கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டது.