தமிழர்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

20200104 104113
20200104 104113

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு தற்போது தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தர்மபால செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்காது ஜனாதிபதி கோட்டாபயவின் கட்சிக்கு வாக்களிப்பதற்கு யோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு வாக்களிக்கவில்லை.

ஆனால் தற்போது வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரைக்கும் இளைஞர்கள் பாடசாலை, பேரூந்து நிலையம், வைத்தியசாலை என்பவற்றை தாமாக முன்வந்து இளைஞர்கள் வர்ணம் பூசி அலங்கரித்தார்கள்.

தற்போது ஜனாதிபதி கோட்டபாயவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

வரவிருக்கும் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்காது ஜனாதிபதி கோட்டாபயவின் கட்சிக்கு வாக்களிக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெள்ளைவான் பிரச்சினை தொடர்பில் பேசியதால் தான் தமிழ் மக்களின் வாக்கு குறைந்தது.

தேர்தல் முடிந்து இரண்டு மாதமாகிறது. இதுவரைக்கும் வெள்ளை வானும் வரவில்லை. கறுப்பு வானும் வரவில்லை. தூக்க எவரும் வரவில்லை. இது தான் பொதுஜன பெரமுனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் உள்ள வித்தியாசம்.

நாங்கள் நீதிமன்றத்தை தவிர, தனிப்பட்ட ரீதியில் எதுவும் செய்யமாட்டோம். அதனை மக்கள் யோசிக்க வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்டு தான் தீர்மானங்கள் எடுக்கின்றார்.

வேலைவாய்ப்பு இன்மை, விவசாயம் இல்லை, நிரந்தரமான தொழில் இல்லை என 5 வருடம் மக்கள் கஸ்ரப்பட்டார்கள்.

தேர்தலுக்கு முன் மழை பெய்யாது வரட்சி இருந்தது. தேர்தல் முடிந்து கோட்டபாய வென்ற பின் தான் மழை பெய்தது. தற்போது குளங்கள் நிறைந்து விவசாயம் செய்கிறார்கள். இனி மக்களின் கைகளில் பணம் இருக்கும். பொய்யான பரப்புரைகளுக்கு செவிசாய்க்காது எந்தக் கட்சி சரியாக அரசாங்கம் செய்கிறதோ, அந்தக் கட்சியுடன் இருங்கள்.

கடந்த ஆட்சியில் அரசாங்கம் ஒன்று இருந்ததா என்று கூட தெரியவில்லை. மைத்திரிபால ஒருபக்கம் இழுக்க, ரணில் விக்கிரமசிங்க ஒரு பக்கம் இழுக்க கடைசியில் மக்கள் தான் பாதிக்கப்பட்டார்கள்.

எங்களிடம் இருந்து அதிக வரி அறவிட்டார்கள். மத்திய வங்கியில் கொள்ளையடித்தார்கள். எனவே சிந்தித்து செயற்படுங்கள்” என தெரிவித்தார்.