எரிபொருள் – எரிவாயு கோரி இன்று பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

IMG 20220519 WA0004
IMG 20220519 WA0004

எரிபொருள் மற்றும் எரிவாயு கோரி இன்று பல பகுதிகள் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இரத்மலானை பகுதியில் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் கொழும்பு – காலி பிரதான வீதியின் ஹிக்கடுவ பகுதியை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, கொழும்பு – ஹொரணை வீதியின் பிலியந்தலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் நுகேகொடை – நாவல எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

காலி – தெவட்ட சந்தியில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி – மாத்தறை பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றிரவு திருகோணமலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், இன்று முதல் நாளாந்தம் 80,000 எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை இரண்டு எரிவாயு கப்பல்களுக்கு 7 மில்லியன் அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்தப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் 3,900 மெற்றிக் தொன் எரிவாயு கப்பலில் இருந்து தரையிறக்கப்பட்டது.

தற்போது 6 நாட்களுக்கு போதுமான எரிவாயு கையிருப்பில் உள்ளது.

எனினும் எதிர்வரும் திங்கட்கிழமை இரண்டு கப்பல்களுக்கு கட்டணம் செலுத்தப்பட்டதன் பின்னர் பெறப்படும் எரிவாயு இரண்டு வாரங்களுக்கு போதுமானதாக இருக்கும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.