எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்குள்ளாகி ஒரு வருடம் பூர்த்தி

X Press Pearl fire expolosion 750x375 1
X Press Pearl fire expolosion 750x375 1

நாட்டின் மேற்கு கடற்பரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.

எனினும், அதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பின் தாக்கம் இன்னும் தீரவில்லையென, மீனவ சமூகம் கவலை வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம், மே மாதம் 20ஆம் திகதியன்று, கொழும்பு கடற்கரையிலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டிருந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல், பாரிய தீ விபத்துக்குள்ளானது.

குறித்த கப்பலில் இரசாயனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் என்பன உள்ளடங்கிய  1,486 கொள்கலன்கள்  களஞ்சியப்படுத்தப்படிருந்தன.

இதனை தொடர்ந்து ஏற்பட்ட பாரிய தீப்பரவலினால், தொடர்ந்து 13 நாட்களுக்குப் பிறகு குறித்த கப்பல் கடலில் மூழ்கியது.

இந்த தீ விபத்தின் பாரிய தாக்கத்தினால் கடல்வாழ் உயிரினங்களின் அழிவுக்கு பெருமளவு வழிவகுத்ததுடன், கடற்கரை பகுதிகளிலும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.

கப்பல் தீப்பிடித்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், அதன் தாக்கம் இன்னும் உள்ளது என்பதற்கு பமுனுகம – சரக்குவ கடற்கரை சிறந்த சான்றாகும்.

இதேவேளை, உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தை, லுனாவ, மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்குச் செல்லும் மீனவர்களின் மீன்பிடி வலைகளில் இன்னமும் கப்பலின் கழிவு பொருட்கள் சிக்குண்டு கொள்வதாக மீனவர்கள் முறையிடுகின்றனர்.

அதுமாத்திரமின்றி, தமக்கு உரிய நட்டஈடு இதுவரை கிடைக்கவில்லை எனவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.