இலங்கை பிரஜைகளின் 337 மில். ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் இந்திய அரசினால் பறிமுதல்!

ed 0 1200x768
ed 0 1200x768

பணமோசடி தடுப்பு வழக்கு  ஒன்று தொடர்பில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கை பிரஜைகளின் 337 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று அசையா சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக இந்தியாவின் அமுலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ஈசிஆர் என்ற இடத்தில்  உள்ள ஒரு பங்களாவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரம குமார் என்ற குணசேகரன் மற்றும் அவருடைய மகன் திலீப் ஆகியோருக்கு  சொந்தமான இரண்டு விவசாய நிலங்களும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பாக குமார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் 2020 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் குற்றப்புலனாய்வு  பதிவு செய்த வழக்கு  அடிப்படையில் அமுலாக்க இயக்குநரகம் பணமோசடி விசாரணையை ஆரம்பித்தது.

குமார், அவரது மகன் மற்றும் பலர், வெளிநாட்டினர் சட்டம், கடவுச்சீட்டு  சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் உள்ள குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் போன்ற போலி அடையாள அட்டைகளை உருவாக்கி இந்தியாவில் பயன்படுத்தியுள்ளதுடன், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.

விசாரணையில் குமார், சுரேஷ் ராஜ், முகமது ஷெரீப், காமினி என்ற ராஜா மெதுரகெதர ஆகியோர் போதைப்பொருள் கொள்முதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டமை தெரியவந்தது.

மேலும் அவர்கள் 2011 ஆம் ஆண்டு குற்றத்திற்காக நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைத்தண்டனை முடிந்த பிறகு, அவர்கள் தங்கள் அடையாளத்தை மாற்றி, குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் இந்த வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு வாங்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது. ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த சொத்துக்களின்  மதிப்பை விட சந்தை மதிப்பு அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.