தமிழ் அரசியல் கைதி சிவலிங்கம் ஆரூரன் விடுதலை!

23 64636e28d01c2
23 64636e28d01c2

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, 2006 ஆம் ஆண்டு கொழும்பு பித்தல சந்திப் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

சிவலிங்கம் ஆரூரன் 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, புதிய மெகசின் சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க அவரை விடுதலை செய்தார்.

கொலைக்கு சதி செய்ததாக 13 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்ததுடன், பிரதிவாதிக்கு எதிராக 6 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

43 வயதான ஆரூரன், 2004 ஆம் ஆண்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைக் கற்கும் போது கைது செய்யப்பட்டார்.

சிறைவாசத்துக்குப் பிறகு தனது எழுத்துத் திறனை வளர்த்துக் கொண்ட ஆரூரன், தமிழில் 7 நூல்களையும் ஆங்கிலத்தில் ஒரு நூலையும் எழுதியுள்ளார்.

இந்நிலையில், சிவலிங்கம் ஆரூரன் எழுதிய ´ஆதுரசாலை´ என்ற தமிழ் நாவலுக்கு 65 ஆவது அரச இலக்கிய விருது வழங்கும் விழாவில் சிறந்த நாவலுக்கான விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.