வைத்தியர் ஷாபியின் வழக்கில் சஹ்ரானின் பெயரால் சர்ச்சை!

1 dr shafi
1 dr shafi

குருணாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கில் இன்று பயங்கரவாதி சஹ்ரானின் பெயரால் பெரிதும் சர்ச்சை ஏற்பட்டது.

இன்றைய தினம் குருணாகல் நீதிவான் நீதிமன்றத்தில் வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு நீதிவான் சம்பத் ஹேவாவசம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது,

இதன்போது கருத்தடை விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தாய்மார்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாணக, சந்தேக நபரான ஷாபியை லாபிர் எனும் நபரொருவருடன் தொடர்புபடுத்தி முன்வைத்த கருத்தால் இந்த சர்ச்சை ஏற்பட்டது.

இவ்வழக்கின் ஆரம்பத்தில், இந்த சந்தேக நபர் (ஷாபி) லாபிர் என்னும் சந்தேக நபருடன் தோன்றும் புகைப்படத்துடன் கூடிய இறுவெட்டொன்று குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த லாபிர் எனும் நபர் பயங்கரவாதி சஹ்ரானுடன் சத்தியப்பிரமாணம் செய்தவர். அது குறித்து எந்த விசாரணையும் இல்லை. அந்த பின்னணியில் பங்கரவாத தடைச் சட்டம் ஷாபி விடயத்தில் நீக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

எனினும் இதன்போது வைத்தியர் ஷாபியின் சட்டதரணிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டதுடன் ஜனாதிபதி சட்டத்தரணி நவரட்ன பண்டார இது கருத்தடை விவகாரம் குறித்த தாய்மார்களின் வழக்கு. பாதிக்கப்பட்டோர் தாய்மாரா? சஹ்ரானா? என கடும் தொனியில் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து மன்றில் பெரும் சர்ச்சை மற்றும் பரபரப்பு ஏற்பட்டதுடன் சிறிது நேரத்தில் நீதிவான் சிறிது நேரம் அமைதிகாத்து நிலைமையை சரி செய்தார்.

இந்நிலையில் வைத்தியர் ஷாபியிற்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 14ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.