அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் – மன்னார் நகர முதல்வர்

DSC 1562 1
DSC 1562 1

மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சபையின் சக உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னார் நகர சபையின் 23ஆவது அர்வும், 2020 ஆம் ஆண்டிற்கான முதல் அமர்வும் இன்று (28) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன் போது தலைமை உரையாற்றி நகர சபை முதல்வர்,

கடந்த வருடம் சபையின் நிதியில் இருந்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆதரவு வழங்கியிருந்தீர்கள். அதேபோன்று இந்த ஆண்டும் சபையின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்திட்டங்களுக்கு உங்களின் பூரண ஆதர தேவை.

வரவு,செலவுத் திட்டங்களுக்கு அமைவாக முதலாவது காலாண்டு பகுதிக்குள் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து நாம் இந்த சபையிலே கலந்து ஆலோசித்து தீர்மானங்களை மேற்கொண்டு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும்.

சபையில் முன் வைக்கப்படவுள்ள பிரேரணைகளை மூன்று நாட்களுக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். குறித்த பிரேரணையில் கூறப்படுகின்ற விடயங்கள் மாத்திரம் நாங்கள் அறிக்கையாக தயாரிக்க வேண்டும். விவாதிக்கின்ற விடயங்கள் அறிக்கையில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது.

பிரேரணையில் முன் வைக்கப்படுகின்ற விடயங்கள் மாத்திரமே கூட்டறிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படும்” என தெரிவித்தார்.