ஜனாதிபதியின் விசேட நிதியை உள்ளூர் அபிவிருத்திக்கு வழங்குக! ஆளுநரிடம் சாள்ஸ் கோரிக்கை

Screenshot 20200129 225530 Gmail
Screenshot 20200129 225530 Gmail

ஜனாதிபதியின் விஷேட நிதியை வடக்குக்கு கொண்டுவந்து அபிவிருத்திக்கு உதவி கரம் நீட்ட வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

12 மில்லியன் ரூபா செலவில் நிருமானிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச சபையின் முருங்கன் உப அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இதனை தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை (27) நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி தலைமையில் வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதனின் பங்குபற்றுதலுடன் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் கலந்து கொண்ட சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்ந்து பேசுகையில்,

உள்ளூராட்சி மன்றங்கள்தான் கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை மக்களுக்கு நேரடியாக தீர்க்கக்கூடிய மன்றங்களாகும். ஆனால் இந்த உள்ளூராட்சி மன்றங்கள் மக்களுக்கு சேவையாற்றுவது மிக சொற்பமே.

இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பது வட மாகாண அமைச்சுகளுக்கு மக்களுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி மிக சொற்பமே. வட மாகாண பிரதம செயலாளரினால் முன் வைக்கப்படுகின்ற திட்டத்தில் பத்தில் ஒரு பங்கே வட மாகாணத்துக்கு மட்டுமல்ல ஐந்து மாவட்டங்களுக்கும் இவ்வாறு சமமாக நிதி ஒதுக்கப்படுகின்றது.

வட மாகாணத்தைப் பொறுத்தமட்டில் பலதரப்பட்ட தேவைகள் அதிகம் இருக்கின்றன.

மத்திய அரசால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி மிக குறைவாக இருப்பதால் உள்ளூராட்சி மன்றங்கள் சரியான முறையில் இயங்க முடியாத நிலையில் காணப்படுகின்றன.

ஆகவே நான் ஆளுநரிடம் வேண்டி நிற்பது பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்ற வரவு
செலவு திட்டத்தில் ஒதுக்கப்படுகின்ற விஷேட நிதியில் வடக்கு மாகாணத்து கணிசமான நிதியை வடக்கு மாகாணத்துக்கும் கொண்டு வருவதற்கான முயற்சியை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும் என வேண்டி நிற்கின்றேன்.

அத்துடன் ஜனாதிபதியின் நிதியத்திலிருந்தும் ஆளுநராகிய நீங்கள் இவ் வட மாகாணத்துக்கு நிதியை கொண்டு வருவீர்கள் என நம்புகின்றேன். இருந்தும் நான் ஒரு மக்கள் பிரதிநிதி என்பதால் இவ் கோரிக்கையை இந்த நேரத்தில் உங்கள் முன் வைக்கின்றேன்.

அடுத்து எங்கள் மாவட்டமாக இருக்கலாம் அல்லது ஏனைய மாவட்டங்களாக இருக்கலாம் கடந்த வருடம் 2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த அபிவிருத்தி வேலைகளுக்கான நிதி தொடந்து நிலுவையில் இருக்கின்றன.

இரண்டு மில்லியன் ரூபாவுக்கு உட்பட்ட வேலைகளை கிராம அபிவிருத்தி சங்கங்களும் அதற்கு மேற்பட்ட வேலைத் திட்டங்களை ஒப்பந்தக்காரர்களும் செய்திருக்கின்றனர்.

ஆகவே நடந்து முடிந்த வேலைத் திட்டங்களுக்கான நிதியை வழங்காது காலம் தாழ்த்திச் செல்வதால் பலர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

நான் பாராளுமன்ற கட்டிடத்தில் பிரதமரைச் சந்தித்தபோது இது விடயமாக அவரிடம் உரையாடினேன். ஆனால் தற்போது இதற்கான நிதி இல்லையென தெரிவித்தார்.

இதனால் பாதிப்படைவது அரச திணைக்களங்கள் மட்டுமல்ல கிராமபுறங்களிலுள்ள
பொது அமைப்புக்கள் தனிப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் யாவரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

ஆகவே ஆளுநர் அவர்கள் இதுவிடயத்திலும் மிக்க கவனம் செலுத்தி இதற்கான தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகின்றேன்.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் ஒரு பெரிய குறை இருக்கின்றது. அதாவது மடு பிரதேச செயலகத்தை இரண்டு பிரதேச சபைகள் கையாளுகின்ற சூழல் இருக்கின்றது.

அதாவது மடுவில் ஒரு பிரதேச செயலகம் இருந்தாலும் மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்களுக்கு நான்கு பிரதேச சபைகள்தான் இருக்கின்றன. வட மாகாணத்தில் மடு, கண்டாவளை, ஒட்டிச்சுட்டான், மருதங்கேணி ஆகிய பிரதேச செயகங்களுக்கு பிரதேச சபைகள் உருவாக்கப்படவில்லை.

கடந்த அரசாங்கத்தின் போது இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு பிரதம செயலாளர் தலைமையில் இதற்கான கூட்டங்கள் நடாத்தப்பட்டு அதற்கான தரவுகள், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் மடு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மக்கள் தொகை காணாது என கருத்தும் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் இவ் மடு பிரதேச செயலகப் பகுதியில் ஒரு பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டிய அவசியம் உண்டு.

ஆகவே ஆளுநர் அவர்கள் இவ் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என கேட்டு நிற்கின்றேன். ஏனென்றால் நானாட்டான் மற்றும் மாந்தை மேற்கு ஆகிய இரு பிரதேச சபைகளும் கூடிய பரப்பளவுக்கு சேவை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

ஆகவே நான் முன்வைத்துள்ள இந்த மூன்று கோரிக்கைகளையும் ஆளுநரிடம் முன்வைத்துள்ளேன். இவற்றை தீர்த்து வைப்பார் என்று அவரிடம் நான் பெற்ற அனுபவம் ஒன்றிலிருந்து எனக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது. நல்ல ஆளுமை கொண்ட ஒருவரை வட மாகாணம் பெற்றிருப்பது மகிழ்சிக்குரியது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.