தம்மை வெளியேற்றியது கௌரவமான கட்சியின் செயற்பாடு அல்ல – பொன்சேகா விசனம்

Sarath Fonseka1 1
Sarath Fonseka1 1

ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக வழியிலிருந்து, விலகி சர்வாதிகாரப் போக்குடன் பயணிக்க ஆரம்பித்துள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா விசனம் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைதெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“செயற்குழு உறுப்பினர்களை வெளியேற்றவும், தங்களுக்கு தேவையான நபர்களை உள்ளீர்ப்பதும், கௌரவமான கட்சியொன்றின் செயற்பாடு அல்ல.

ஜனநாயக ரீதியான கட்சியென்றால், தனிநபர் ஒருவர் இந்த விடயங்கள் தொடர்பாக முடிவெடுக்கக்கூடாது. கட்சித் தலைவர் மட்டும் இந்த விடயத்தில் முடிவெடுக்க, கட்சி ஒன்றும் அவரது தனிப்பட்ட சொத்து கிடையாது.

இது மக்களின் கட்சி என்பதால், ஒருவர் செய்யும் தவறுகூட மக்களைத்தான் பாதிக்கும். தெரிவுக்குழுவின் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்குக்கூட ஒரு குழு உள்ளது. ஆனால், எம்மை எல்லாம் வெளியேற்றிய செயற்பாடுகள் இவ்வாறு இடம்பெறவில்லை.

கடந்த நான்கரை வருடங்களில் அரசாங்கம் என்ற ரீதியில் மக்களுக்காக எதனையும் நாம் செய்யவில்லை. குறைந்தது, ஐக்கிய தேசியக் கட்சியைக்கூட பலப்படுத்தவில்லை. இவ்வாறு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

இந்த தவறுகள் தொடர்பாகவும் நாம் சிந்தித்து, செயற்பட வேண்டும். இவற்றை திருத்திக்கொண்டால், 20 இலட்சம் வாக்குகளை பொதுத் தேர்தலின்போது மேலதிகமாக எம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் மக்கள் விரைவில் உணர்ந்துக்கொள்ளக்கூடிய நிலைமை ஏற்படும் என்பதால், பொதுத் தேர்தலின்போது நாம் மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்துவோம்” என குறிப்பிட்டுள்ளார்.