உரிமைகளைக் கேட்டு ஜனநாயக வழியில் போராடும் தமிழர்கள் – அநுரகுமார

Anurakumara 2
Anurakumara 2

தனிநாடு கோரி முப்பது வருடங்களாக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழர்கள், 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போருடன் அந்தக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டார்கள். அவர்கள் தற்போது பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்தான் தங்கள் உரிமைகளைக் கேட்டு ஜனநாயக வழியில் போராடி வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் அவர்களைப் புறக்கணிக்குப் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் மீண்டும் அவர்களைத் தனிநாடு கோரும் நிலைக்கே தள்ளிவிடும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் இம்முறை சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவித்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம். தமிழ் மொழி தேசிய மொழி  அது அரச கரும மொழி. எனவே, சிங்களத்துடன் தமிழிலும் தேசிய கீதம் பாடுவதில் என்ன பிரச்சினை இருக்கின்றது? என்ன முரண்பாடு இருக்கின்றது? சுதந்திர தினத்தில் கட்டாயம் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டேயாக வேண்டும்.

தமிழர்களைப் புறக்கணிக்கும் வகையிலும் தமிழ் மொழியை அவமதிக்கின்ற வகையிலும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு கோட்டாபய அரசு உடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் அது நாட்டின் நல்லிக்கணத்துக்குப் பாதகமாக அமையும் மீண்டும் ஒரு தனி நாட்டுப் போருக்கே வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.