நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறையில் கருணா போட்டி

6 bgh
6 bgh

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக திடமான முடிவை எடுத்திருக்கிறேன் என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.


கல்முனை உப பிரதேச செயலக முன்றலில் புதன்கிழமை இரவு 10 மணியளவில் கட்சி ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் நாடா ளுமன்ற தேர்தல்   தொடர்பாக   ஊடகவியலாளர் எழுப்பிய  கேள்விக்கு இவ்வாறு கூறினார்.


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக திடமான முடிவை எடுத்திருக்கிறேன்.

ஏனெனில்  இங்குள்ள திறமைமிக்க புத்திஜீவிகள் இளைஞர்களை  இணைத்துக் கொண்டு நாங்கள் தனித்துவமாக போட்டியிடுவதற்கு முடிவெடுத்திருக்கிறோம் .

அம்பாறை மாவட்டத்தில் பல பிரச்சினைகள் இருக்கின்றது. ஒவ்வொரு கிராமத்திற்கும்  பல பிரச்சினைகள் இருக்கின்றது.  இன்றும் கூட   திருக்கோவில்,தம்பிலுவில் பிரதேசத்து மக்களை  சந்தித்து அங்கு இடம்பெறும்  பாரிய கொள்ளைச் சம்பவங்கள் கொலைச் சம்பவங்களும்  தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளை அழைத்து  பாதுகாப்பு மாநாடு கூட்டி  பேசியிருக்கின்றோம் .


பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக பல அபிவிருத்திப் பணிகள் செய்வதற்காகவும் அந்த மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காக இன்று நான் துணிந்து அம்பாறை மாவட்டத்தில் எமது மக்களை நம்பி நான் போட்டியிடுவதாக முடிவெடுத்திருக்கிறேன் அதற்கு நான் சொல்கின்ற இடங்கள் எல்லாம் அந்த மக்கள் பாரிய ஆதரவை வழங்கி வருகிறார் என கூறினார்.