விமான நிலையம் நோக்கி விசேட பாதை

9 d
9 d

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளால், கட்டுநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் வாகன நெரிசலைத் தவிர்ப்பதற்கென விமான நிலையம் நோக்கி விசேட பாதையொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இதனடிப்படையில், சுமார் 600 மில்லியன் ரூபா செலவில் இப் புதிய வீதி நிர்மாணிக்கப்படுமென அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.


அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு, தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது அவர் மேலும் குறிப்பிடும்போது,விமான நிலையத்துக்கு மணித்தியாலம் தோறும் அதிக பயணிகள் வந்து செல்வதனால், அப் பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால், அவ்வீதியூடாகச் செல்லும் ஏனைய பயணிகளும் சிரமங்களைச் சந்திக்க நேரிடுகிறது.

இதன் காரணமாகவே மாற்று வீதியொன்றை ஏற்படுத்த, அமைச்சரவையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
இதன்பிரகாரம், முதலீட்டுச் சபை மற்றும் மினுவாங்கொடை ஊடாக வரும் இரண்டு வீதிகளையும் இணைத்து, விமான நிலையத்தை நோக்கி பாதை உருவாக்கப்படும் என்றார்.